செவ்வாய், 21 ஜூலை, 2009

இறையாண்மை...

இதோ
இன்னமும்
ஒலித்துக்கொண்டு
தானிருக்கிறது
ஒரு இனத்தின்
மரண ஓலம்....

வெறிநாய்கள்
வேட்டையாடியதில்
விலைபேசப்பட்ட
கலவொழுக்கத்துடன் எம்
குல விளக்குகள்...

சூறையாடப்பட்ட பூமியில்
குற்றுயிரும் குலையுயிருமாய்
உறுப்பிழந்து உணர்வுமிழந்து
எம் மக்கள்...

இந்த
வேதனை விளையாட்டில்
தாயகத்தை நொந்துகொண்டு
பித்துப்பிடித்தபடி
எம் தேசத்து
இளைஞர்கள்...

'இனி
என்ன செய்யப்போகிறோம்?'
வாயில் எச்சில் ஒழுக
விரல்சூப்பி விழிக்கும்
எம் எதிர்கால
விஞ்ஞானிகள்...

சுயநலப் பித்தர்களின்
சூழ்ச்சிவலையில்
சொந்த நாட்டிலேயே
கேட்பாரற்று
நாதியற்றுப்போனது
எம் சமூகம்...

அன்பையும்
அஹிம்சையையும்
போதித்த தேசம்
துரோகிகள் பிடியில் சிக்கி
சதிசெய்யத் துணிந்தது...

ஏகலைவனும்
கர்ணனும் பெற்றுத்தந்த
அதே தேசம்தான்
சகுனியையும்
துச்சாதனனையும்
ஈன்றெடுத்தது...

ஒவ்வொரு அவலத்தையும்
ஒளிந்திருந்து
வேடிக்கை பார்த்தத்தில்
முக்காடிட்டுக்கொண்டது
எம் தேசப்பற்று.....

ஆண்மையற்ற
அரசியல் பிணங்களிடை
நிதம்
துகிலுறியப்படுகிறது
எம் தேசத்தின்
இறையாண்மை....

1 கருத்து: