புதன், 29 ஜூலை, 2009

பித்து

ஒலிகளின் சத்தத்தில்
மொழி உருவானது...
கலிகாலம் பலரை
கருவருத்தது மொழியால்...

எல்லா மொழிகளுக்கும்
ஒலியே மூலம்...
நில்லாது என் கவியும்
மொழியறிவில் மீளும்...

இன்பமொழி எனதுமொழி
துன்பங்களை மறக்கடிக்கும்
அன்பகத்தில் விதைந்தமொழி
தென்னகத்தின் திகழ்தமிழே...

இனிமைச் சொல்லை உள்ளடக்கி என்
இமைவிரிக்க வைத்தவளே..
தனிமை என்னை சுடும்போதும்
உமையுன்னை நினைந்துருக...

தாய்மொழியை அறிந்தவன் நான்
தமிழ் மொழியில் திளைத்தவன் நான்
பேய்மொழி வந்து எம்மை
சிமிழுக்குள் அடைத்தாலும் - இந்த
சேய்மொழி என்றும் தமிழே
தமிழ்தானே என்றும் உயிரே..

காதலெனும் மொழியறியா
கயவனென்று சொன்னாலும்
சாதலென்னை நெருங்கிவந்து
சுயமிழக்கச் செய்தாலும்

சாகும்உயிர் நித்தம் உந்தன்
சுவாசம் பெற ஏங்குமே
வேகும் உயிர் செத்தபின்னும்
உன் மடியில் தூங்குமே...

கயவனல்ல நானுந்தன்
கவிப்பித்தன் என்றுரைப்பேன்
குயவன் போல
கவின் மணலில்
கவி வடிப்பேன்- அந்தக்
கவியில் வசிப்பேன்....

நீ தமிழ்
எனும்போதுமட்டும்
நான் கவிஞன்.

மற்ற சமயங்களில்
உன்னை நினைத்து
ஏங்கும் பித்தன்.

சனி, 25 ஜூலை, 2009

கிரகணம்...

கிரகணம்...


ஆதனவனைவிடப்
பிரகாசமானவள் நீ..
உன்னைச் சந்திக்கும்
என் இரவின்
கண்கள் கூசுகிறது....

காணக் கொள்ளைகொள்ளும்
ஒளிப்பேழையாய்...
பேரழகாய் அழைக்கிறாய்...
கண்கள் புண்ணாகிடினும்
கண்டு நானும் திளைக்கிறேன்...

ஆதவனின்
மிருதுவான வெளித்தட்டு
உன் தேகம்...
தெறிக்கும்
ஒளிக்கற்றை
உன் சருமம்....

எந்தத்திசையில் நீ
சென்றாலும்
உன் இயல்புப்
பால்வெளியில்
உன்னையே எண்ணி
பயணிக்கிறது மனம்...

இந்த
வினோதப்பால்வெளியில்
உன்னைச்
சுற்றிச்சுற்றி வருகிறேன்
உயிருள்ள
ஒரே ஒரு கிரகமாய்...

சூரிய ஈர்ப்புவிசையைவிட
உன்
காதல் ஈர்ப்புவிசை
எத்தனை வலுவானது...

ஆதவனைப்போல்
வெடிக்காத
ஹைட்ரஜன் குண்டு
உன் மௌனம்...

மந்தவாயுக்களால்
நிரம்பிய
மந்தகாசம்
உன் முறுவல்...
மௌன நிர்வாணத்தை
மூடிமறைக்க
எத்தனிக்கிறது
ஒருசில வார்த்தைகள்
கிரணங்களாய்...

மௌனப்புன்னகை
வெடிக்கப்போவதில்லை..
என் காதலும்
முற்றுப்பெறப்போவதில்லை...
என்றோ
ஒருசில வினாடிகள்
நாம் நேரெதிராய்
சந்தித்துக்கொள்கிறோம்...
உன் பார்வை
என்மீது விழும்
உயிரற்ற
வினாடிகளில் என்
உயிருள்
கிரணம் பூக்கிறது...
கிரணம் பார்த்தால்
கண் பாதிக்கும் - ஆனால்
ஆயிரம் கோடி
சூரியன் ஒளிர்வதுபோல்
சந்திக்கும் உன்பார்வை.....
பாதிப்பது என் இதயம்...
ஒளிமங்கிப்போவது
கிரணம் ஆனால் என்
உயிர்மங்கிக்கிடக்கிறது
உன் சந்திப்பில்...
உயிரின்
உச்ச ஈர்ப்பு விசையுடன்
சில நொடிகளில்
முடிந்துபோகும்
இன்பக் கிரகணம்
உன் தீண்டல்...

இன்பமான உன்
தீண்டலில்
எல்லை மறக்கிறது
காதல்...
உன் பார்வை
இன்பமாய்க் குளிர்கிறது...
என்னுள்
சந்திரகிரகணம்...
உன் தீண்டல்
வெப்ப விளைவுகளை
விதைக்கிறது....
என்னுள்
சூரியகிரகணம்....

செவ்வாய், 21 ஜூலை, 2009

இறையாண்மை...

இதோ
இன்னமும்
ஒலித்துக்கொண்டு
தானிருக்கிறது
ஒரு இனத்தின்
மரண ஓலம்....

வெறிநாய்கள்
வேட்டையாடியதில்
விலைபேசப்பட்ட
கலவொழுக்கத்துடன் எம்
குல விளக்குகள்...

சூறையாடப்பட்ட பூமியில்
குற்றுயிரும் குலையுயிருமாய்
உறுப்பிழந்து உணர்வுமிழந்து
எம் மக்கள்...

இந்த
வேதனை விளையாட்டில்
தாயகத்தை நொந்துகொண்டு
பித்துப்பிடித்தபடி
எம் தேசத்து
இளைஞர்கள்...

'இனி
என்ன செய்யப்போகிறோம்?'
வாயில் எச்சில் ஒழுக
விரல்சூப்பி விழிக்கும்
எம் எதிர்கால
விஞ்ஞானிகள்...

சுயநலப் பித்தர்களின்
சூழ்ச்சிவலையில்
சொந்த நாட்டிலேயே
கேட்பாரற்று
நாதியற்றுப்போனது
எம் சமூகம்...

அன்பையும்
அஹிம்சையையும்
போதித்த தேசம்
துரோகிகள் பிடியில் சிக்கி
சதிசெய்யத் துணிந்தது...

ஏகலைவனும்
கர்ணனும் பெற்றுத்தந்த
அதே தேசம்தான்
சகுனியையும்
துச்சாதனனையும்
ஈன்றெடுத்தது...

ஒவ்வொரு அவலத்தையும்
ஒளிந்திருந்து
வேடிக்கை பார்த்தத்தில்
முக்காடிட்டுக்கொண்டது
எம் தேசப்பற்று.....

ஆண்மையற்ற
அரசியல் பிணங்களிடை
நிதம்
துகிலுறியப்படுகிறது
எம் தேசத்தின்
இறையாண்மை....

புதன், 15 ஜூலை, 2009

நிரல்

நிரல்
எத்திசையில் பயணித்தாலும்
நினைவுகளில் நீ
புத்திபேதலித்து
ரீங்காரமிடுகிறாய்....
என்
நிலைமைகள்
சொல்லத்தவிக்கும்
கிழமைகளாய் உன்னைச்
சுற்றிச்சுற்றி வருகின்றன..
உறங்கினாலும் விழித்தாலும்
உன்னைத் தரிசிக்கிறது மனம்..
கிறங்கிப்போய்த் தவிக்கிறது
தினம்...
கிட்ட வந்து
கிள்ளினாலும்
எட்ட நின்று
முட்டிப்பார்க்கிறது உன்
சிந்தனை....

தெருவில் விளையாடும்
பிஞ்சுகளைக் காண்கிறேன்..
நீ என்
நெஞ்சினில் விளையாடுகிறாயென
அஞ்சுகிறது மனம்....

கணநேரப் பணியிலும்
ஆசையாய் உனை
இணைத்து
அசைபோடுகிறது மனது...

ஒவ்வொரு
செயல்பாடுகளின்போதும்
என் எண்ணம்
ஒருமுறை உன்னைப்
பரிசீலித்துக்கொள்கிறது
உன்னிடம்
பரீட்சித்துக்கொள்கிறது

என்னுள்
கோப்பு, வரலாறு, கருவியீடு
தேடல், வெட்டல்
ஒட்டல், நகலெடுத்தல்,
அமைப்புகள், செயல்பாடுகள் என
எந்தச் செயல்களுக்கும்
உன் 'உதவி'யையே
நாடுகிறது சிந்தனை....
சிலசமயம்
கட்டுக்கடங்காமல்
சுற்றித்திரிகிறது
எண்ணப்பள்ளங்கள்...
தொடர்ச்சியாக
மீள்பதிப்பு செய்யப்படுகிறாய்...
என் நினைவில்
மீளாப்பதிவாக வெல்கிறாய்...

கோப்புகள் பலவற்றைத்
திறக்கவியலாதவையாக்கி
துவம்சம் செய்கிறாய்...
பிடித்திருக்கிறது உன்
சிறுமித்தனமான இந்த
சிந்தனை...

சில கோப்புகளுக்குள்
உன்னை நுழைத்து
என்னைப்
பைத்தியம் பிடிக்கவைக்கிறாய்...

ஆழ்பட்டுப்போன ஆசைகளுடன்
பாழ்பட்ட கனவுகளுடன்
சம்பந்தமற்று உன்னைச்
சாளரத்தில் இருத்துகிறேன்...
நீயோ திடீரென
தாளறங்கள் பார்க்காமல்
சாளரத்தை மூடிச்
சிந்தனையைச் சிதைக்கிறாய்...

ஒவ்வொருமுறையும்
புதிய பரிமாற்றத்துக்குமுன்
உன்வீட்டுக் கதவைத்
தட்டிப்பார்க்கிறது மனம்

திடீர்திடீரென
துடைக்கப்படுகிறது
கனவுகள்...
துண்டிக்கப்படுகிறது
சிந்தனை...

என் செயல்பாடுகளில்
ஒவ்வொரு மூலைகளிலும்
நந்தியாய் அமர்ந்து
சந்திசிரிக்கவைக்கிறாய்...

என்
நிகழ்ச்சிகளுக்குள்
என்னை அறியாமல்
இணைக்கப்பட்ட
வைரஸ் நிரல் நீ....

வியாழன், 9 ஜூலை, 2009

பிரம்மன்...

இறக்கை உந்திப்
பறந்தது பறவை...
உந்துவிசை படித்தான்...
பறவையின் தோற்றச்
சிறகை வடித்தான்...
விமானத்தில் பறந்தான்...

தொலைதூரப்பயணத்தில்
தொலைந்துபோய் சிதைந்தவன்...
அலைவரிசை கண்டான்...
தொலைதூரம் சென்றாலும்
தொடர்புகொண்டு அலைந்தான்...

பூகோளம் அறிந்தான்...
செயற்கைக்கோள் ஏவினான்
கம்பியில்லா தந்திமுறை
பயின்றான்...

உலகம் முழுக்க ஓடிஓடி
செய்திசொல்ல நினைத்தவன்
அலைவரிசை ஒளிபரப்பி
தொலைக்காட்சி செய்தான்...
கலைக்காட்சி களித்தான்...
கணக்குப்போட்டு குழம்பி
இணக்கமின்றித் தவித்தவன்
பிணக்குகள் இன்றி
கணக்கெழுத நினைந்தான்..
மறதி தொலைத்து
நினைவு வளர்க்க
தனி மூளை தேவையென
கணி மூளை வடித்தான்...
கணிணி கொணர்ந்தான்...

கடலுக்குள் நடந்தான்...
நிலத்தில் பறந்தான்...
வானில் நீந்தினா....
உற்பத்தி விருத்திக்கு
எந்திரம் கொணர்ந்தான்...
அடிமை உயிர்களை
விடுவித்தான்...
தந்திரங்கள் படித்து
எந்திரங்களின்
எசமானன் ஆனான்...

நிலவறைக்குள் ஒளிந்துநின்று
நிலவை ரசித்தவன்...
நிலவிற்குள் கால்பதித்து
குடியேற்றம் அமைத்தான்...

உயிரினம் உள்ள இந்த
ஒரே உலகை ஆண்டான்
தனக்கேற்ப விதித்தான் என்றாலும்
தன்னிறைவின்றி தவித்தான்...
இவன் சாதாரண மனிதன்....

ஆனால்....
குறுகிய காலமாம்
ஐம்பதே ஆண்டுகளில்
60 கோடியை
120 கோடியாக
ஆக்கிக்காட்டியவன்
மனிதனல்ல....பிரம்மன்....

பொதி...

சுமந்து செல்லத்
திராணியற்று
தன் வாழ்க்கையைச்
சுமையாய்
இழுத்துச் செல்கிறது
ஒரு கழுதை...

உன் நியாயங்களை
நீதான் பார்க்கவேண்டுமென்று
என் நியாயங்களைப்
புதைக்கவும், விதைக்கவும்
ஆள்தேடிக் களைத்தது....

முற்றுப்பெறாத வார்த்தைளுடன்
முற்றும் துறந்த முனிவனாய்
முற்றத்துக்குள் ஒளிந்துநின்று
முற்றிப்போய் எட்டிப்பார்க்கிறது வயது...

ஒவ்வொரு திசையிலும்
வெவ்வேறு திசைவேகத்தில்
ஓடி ஆடிக் களைத்த தேகம்..

ஆம்.....இவர்கள் தம்
நேற்றைய முகவரியில்
நாளையைத் தொலைத்தவர்கள்...
இவர்களிடம் நியாயத்தை
எதிர்பார்க்க இயலுமா?

பதறிய மழலைகளின்
சிதறிய கேள்விகள் பல
விடையற்ற கேள்விக்குறிகளுடன்....

திட்டம் போட்ட உந்தன்
எதிர்காலச் சதிநோக்கால்
பட்டாம்பூச்சி பிடிக்கும் வயதில்
பட்டுபோய்விட்டது இந்தக் கனவு....

உன் கனவுகளை
நனவாக்க நினைந்ததில்
எரிக்கப்பட்ட எதார்த்தங்களுடன்
விரக்தியில் தொலைந்துபோன
கனவுகளுடன் தவிக்கிறது
இந்த மழலை...

வாழ்வின் நிச்சயவசந்தங்கள்
தூர ஒடுங்கிட....
இயல்பு விளையாட்டுக்கள்
கசந்து தொலைந்திட
தன்சுயத்தை இழந்து
பயத்துடன் தவிக்கிறது மழலை...

விளையாட்டாய்த் தலையாட்டி
தன்னறிவில் மெய்சேர்த்து
உயிரும் உணர்வும்
அன்போடு கலந்து கொடுத்து
சுயத்துடன், சுய சிந்தனையுடன்
விண்கல்லும் விஞ்ஞானமும்
மண்கல்லும் மதிநுட்பமும்
எண்கற்று மகிழ்ந்துருகி
பொன்னறிவு மிளிரும் வயதில்
புத்தகச் சுமைக்குள்
புதைந்துவிடுகிறது சிந்தனை....

புத்தகச் சுமைக்குள்
வித்தகம் தொலைத்து
நித்தம் விழிக்கிறது ஒரு மழலை...
சத்தமின்றித் தவிக்கிறது - இந்த
புத்தம்புது பூமியில் தம்
சித்தம் தொலைத்து - மனப்
பித்தம்பிடித்து அலைகின்றது
மத்தளமாய் உழல்கின்றது...

உன் இயலாமைக்கு வடிகாலாய்ச்
சின்னஞ்சிறு பிஞ்சுகளைச்
சுமையேற்றி, வெறிபிடித்த
இன்பம் காணுகின்றாய்...

உன்னால் இயலாதுபோய்
நொறுங்கிச் சில்லாகிப்போன
சில்லறை வாழ்க்கையாய்
தொலைந்த கனவுகளைத்
தேவையின்றித் திணிக்கின்றாய்...

மதியிழந்து கதியிழந்து
பூவைச் சுமக்கும் வயதில்
பொதிசுமக்க வைக்கின்றாய்...

முட்டாள்தனமான உன்
முடிவுகளின் பெருஞ்சுமையில்
சிட்டாய்ப்பறந்தவை - தன்
சிறகொடிந்து.. நோய் படந்து
பட்டுபோய், பொய்முகத்தில்
படர்ந்துபோய்...

முதுகெலும்பற்ற இந்த
முதுமையின் சூழ்ச்சியில்
முதுகெலும்பு வளையமுதுகில்
சுமத்தப்படுகிறது பொதி...

தோல்வியின் பாடங்கள்
வெற்றியின் முதுகிலேற்றியதில்
வேள்விகள் படைக்கும் வேளையில்
கேள்விக்குறியுடன்
நொண்டியடிக்கிறது வெற்றி...

"என்னைக் காப்பாற்றுங்கள்"...
ஆழ்பட்ட கிணற்றுக்குள்ளிருந்து
பாழ்பட்ட கூக்குரல்கள்...
கண்கள் இருட்டடித்த படி
கண்ணாடி அணிந்து துழாவும்
எண்ணற்ற பிஞ்சுகளின்
கண்ணீர்க்குரல்கள் இவை...

"நாளைய சமுதாயப்
பெருஞ்சுமையை முதுகில் சுமக்க
இன்றேஏற்றப்படுகிறது - இந்தப்
பிஞ்சுகளின் முதுகில் பொதி...."