வியாழன், 9 ஜூலை, 2009

பொதி...

சுமந்து செல்லத்
திராணியற்று
தன் வாழ்க்கையைச்
சுமையாய்
இழுத்துச் செல்கிறது
ஒரு கழுதை...

உன் நியாயங்களை
நீதான் பார்க்கவேண்டுமென்று
என் நியாயங்களைப்
புதைக்கவும், விதைக்கவும்
ஆள்தேடிக் களைத்தது....

முற்றுப்பெறாத வார்த்தைளுடன்
முற்றும் துறந்த முனிவனாய்
முற்றத்துக்குள் ஒளிந்துநின்று
முற்றிப்போய் எட்டிப்பார்க்கிறது வயது...

ஒவ்வொரு திசையிலும்
வெவ்வேறு திசைவேகத்தில்
ஓடி ஆடிக் களைத்த தேகம்..

ஆம்.....இவர்கள் தம்
நேற்றைய முகவரியில்
நாளையைத் தொலைத்தவர்கள்...
இவர்களிடம் நியாயத்தை
எதிர்பார்க்க இயலுமா?

பதறிய மழலைகளின்
சிதறிய கேள்விகள் பல
விடையற்ற கேள்விக்குறிகளுடன்....

திட்டம் போட்ட உந்தன்
எதிர்காலச் சதிநோக்கால்
பட்டாம்பூச்சி பிடிக்கும் வயதில்
பட்டுபோய்விட்டது இந்தக் கனவு....

உன் கனவுகளை
நனவாக்க நினைந்ததில்
எரிக்கப்பட்ட எதார்த்தங்களுடன்
விரக்தியில் தொலைந்துபோன
கனவுகளுடன் தவிக்கிறது
இந்த மழலை...

வாழ்வின் நிச்சயவசந்தங்கள்
தூர ஒடுங்கிட....
இயல்பு விளையாட்டுக்கள்
கசந்து தொலைந்திட
தன்சுயத்தை இழந்து
பயத்துடன் தவிக்கிறது மழலை...

விளையாட்டாய்த் தலையாட்டி
தன்னறிவில் மெய்சேர்த்து
உயிரும் உணர்வும்
அன்போடு கலந்து கொடுத்து
சுயத்துடன், சுய சிந்தனையுடன்
விண்கல்லும் விஞ்ஞானமும்
மண்கல்லும் மதிநுட்பமும்
எண்கற்று மகிழ்ந்துருகி
பொன்னறிவு மிளிரும் வயதில்
புத்தகச் சுமைக்குள்
புதைந்துவிடுகிறது சிந்தனை....

புத்தகச் சுமைக்குள்
வித்தகம் தொலைத்து
நித்தம் விழிக்கிறது ஒரு மழலை...
சத்தமின்றித் தவிக்கிறது - இந்த
புத்தம்புது பூமியில் தம்
சித்தம் தொலைத்து - மனப்
பித்தம்பிடித்து அலைகின்றது
மத்தளமாய் உழல்கின்றது...

உன் இயலாமைக்கு வடிகாலாய்ச்
சின்னஞ்சிறு பிஞ்சுகளைச்
சுமையேற்றி, வெறிபிடித்த
இன்பம் காணுகின்றாய்...

உன்னால் இயலாதுபோய்
நொறுங்கிச் சில்லாகிப்போன
சில்லறை வாழ்க்கையாய்
தொலைந்த கனவுகளைத்
தேவையின்றித் திணிக்கின்றாய்...

மதியிழந்து கதியிழந்து
பூவைச் சுமக்கும் வயதில்
பொதிசுமக்க வைக்கின்றாய்...

முட்டாள்தனமான உன்
முடிவுகளின் பெருஞ்சுமையில்
சிட்டாய்ப்பறந்தவை - தன்
சிறகொடிந்து.. நோய் படந்து
பட்டுபோய், பொய்முகத்தில்
படர்ந்துபோய்...

முதுகெலும்பற்ற இந்த
முதுமையின் சூழ்ச்சியில்
முதுகெலும்பு வளையமுதுகில்
சுமத்தப்படுகிறது பொதி...

தோல்வியின் பாடங்கள்
வெற்றியின் முதுகிலேற்றியதில்
வேள்விகள் படைக்கும் வேளையில்
கேள்விக்குறியுடன்
நொண்டியடிக்கிறது வெற்றி...

"என்னைக் காப்பாற்றுங்கள்"...
ஆழ்பட்ட கிணற்றுக்குள்ளிருந்து
பாழ்பட்ட கூக்குரல்கள்...
கண்கள் இருட்டடித்த படி
கண்ணாடி அணிந்து துழாவும்
எண்ணற்ற பிஞ்சுகளின்
கண்ணீர்க்குரல்கள் இவை...

"நாளைய சமுதாயப்
பெருஞ்சுமையை முதுகில் சுமக்க
இன்றேஏற்றப்படுகிறது - இந்தப்
பிஞ்சுகளின் முதுகில் பொதி...."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக